
நம் அனைவருக்குமே பொதுவாக கடவுள் பற்றி சில கேள்விகள் உண்டு. நம்மால் கடவுளைப் பார்க்க முடியுமா? அவர் எந்த வடிவத்தில் இருப்பார்? நம்மிடத்திற்கு அவரை அழைக்க முடியுமா? ராஜாஜி அவர்கள் தன் ‘குறை ஒன்றும் இல்லை’ என்னும் பாட்டில் ‘கண்ணா – உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்’ என்று ஏக்கத்துடன் கூறுவதைப் பார்க்கும் போது மிகவும் சாமானியமான நம்மால் அவரை உணரமுடியுமா என்கிற சிந்தனை வருகிறது.
இதே சிந்தனை கவியரசு கண்ணதாசனுக்கும் வந்திருக்க வேண்டும். தன் எளிமையான கவிதைகள் மூலம் ஆழமான ஆன்மீகச் சிந்தனைகளை சாமானிய மக்களிடம் பிரபலமடைய செய்த அவருக்கு இந்தக் கேள்விகளின் பதில் தெரிந்திருக்கிறது. “கிருஷ்ண கானம்” என்னும் பிரபலமான தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பில் இவைகளை மிகவும் அருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பாடலின் மூலம் அவர் இவ்வாறு விளக்குகிறார். “கண்டிப்பாக அனைவரும் கடவுளை பார்க்கலாம். சிறு பெண்ணான கோதையின் (ஆண்டாள்) இனிய திருப்பாவையைக் கேட்டு அதில் மயங்கி கண்ணன் ஆண்டாளுக்கு அருள்பாலித்தான். ஆழ்வார்களின் பக்தி இலக்கித்திற்கு மயங்கிய அவன், தேவகி வசுதேவரின் பாசத்திற்காக அவர்களுக்கு திருமகனாகவே அவதரித்தான். அறியாமையில் மூழ்கியிருந்த அர்ஜுனனுக்கும் மற்றவர்களுக்கும் உபதேசம் செய்ய கீதாச்சார்யனாகவும் அவனே வந்தான். திரௌபதியின் ஈனக் கூக்குரலும் அவனை வரத்தூண்டியது. நண்பனாக குசேலனின் ஏழ்மையை போக்குவதற்கும் அவன் வரத் தயங்கவில்லை. முழு நம்பிக்கையோடும் பக்தியோடும் சரணமடையும் எப்படிப்பட்டவருக்கும் அருள்பாலிப்பவனே நம் கண்ணன் என்று “கோதையின் திருப்பாவை…” என்னும் இப்பாடலின் மூலம் அழகாக பதில் அளித்துள்ளார்.
இந்த பாடலின் வரிகள் கீழே கொடுத்துள்ளோம். மேலும் திரு வீரமணி பாடிய காணொளியையும் இணைத்துள்ளோம். இந்த பாடலுக்கு இசை அமைத்திருப்பவர் M. S. விஸ்வநாதன் அவர்கள். அனைவரும் இப்பாடலை அவசியம் ஒரு முறையாவது கேட்க வேண்டும்.
கண்ணனை மனதில் நிலை நிறுத்திக்கொண்டு இந்த பாடலை படியுங்கள் கேளுங்கள். நம்பிக்கை உண்டென்றால் கண்டிப்பாக கண்ணன் உங்கள் வீடு தேடி வருவான்!

கோதையின் திருப்பாவை …
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்
வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்
ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்
பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்
ஏழைக் குசேலனுக்குத் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
மேலும் படியுங்கள் வேறு சில பக்தி பாடல்கள்