தேடல் வலைத்தளத்தின் மூலம் நல்ல கருத்துக்களை உங்களுக்கு வழங்குவதே எங்கள் விருப்பமாகும். அதிலும் குழந்தைகளுக்கு ஆன்மிக விஷயங்களை எளிமையாகக் கொடுக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கமும் அதில் அடங்கும். புராணக் கதைகளைச் சிறிது மாறுதல்களோடு குழந்தைகளுக்கு எப்படி சொல்லலாம் என்று யோசிக்கும் போது தான் “குழந்தைகளுக்கு மகாபாரத கதை சொல்லலாமா?” என்கிற கட்டுரை உருவானது.
அதன் பின் “குழந்தைகளுக்கான கர்ணன் கதை” என்னும் கட்டுரை வெளிவந்தது. அதற்கு கிடைத்த வரவேற்பு, இதனை ஒரு தொடர் கட்டுரையாக எழுத வழி வகுத்தது. இது போன்று மேலும் பல கட்டுரைகள் எழுதுவதைப் பற்றி விவாதித்து “நந்தனாவின் ஆன்மீக பயணம்” என்கிற தொடரை உருவாக்கினோம். உங்களின் கருத்துக்களும், பாராட்டுகளும் எங்களுக்கு இந்த தொடரில் மேலும் பல கட்டுரைகளை எழுத ஊக்கம் தந்தன.
தேடலின் சில கட்டுரைகள் தமிழ் நாளிதழான தினமலரின் ஆன்மீக மலர் இதழில் வெளி வந்துள்ளன. முதன் முதலாக “வாமனரின் மூன்றடி உணர்த்தும் மூன்று உண்மைகள்” என்ற கட்டுரை வெளிவந்தது. அதன் பிறகு “நந்தனாவின் ஆன்மீக பயணம்” தொடரின் இரண்டு கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. இதனை தேடலுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறோம். ஆன்மீக மலரின் வாசகர்கள் இந்த கட்டுரைகளைப் பற்றி தங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியையும், புதிய அனுபவத்தையும் கொடுத்தது.
https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=16765
https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=16742
https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=16813
அவ்வாறான கருத்துக்களில் முக்கியமான ஒன்றை இங்கே பகிர்கிறோம். சில தினங்களுக்கு முன் கருமத்தம்பட்டி என்ற ஊரில் இருந்து சத்யா என்ற பெண்மணி எங்களைத் தொடர்பு கொண்டு தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
அவர்: “ஹலோ… தம்பி நீங்க தான் ஊரடங்கில் நந்தனா என்ற கதையை எழுதினீங்களா? ரொம்ப நல்லா இருக்கு. இன்னிக்கி என் பேத்தியோட சேர்ந்து நான் படிச்சேன். இது போல நம்ம குழந்தைகளுக்கு நல்ல விஷயத்தை கதையா சொன்னா அவங்களுக்கு பிடிக்கும். உங்க பசங்களுக்கும் இப்படி தான் கதை சொல்லுவீங்க போல. ரொம்ப சந்தோஷம். இது போல நிறைய எழுதுங்க. என் பேத்தியோட சேர்ந்து நானும் படிக்கிறேன்.
நான்: “இந்த கட்டுரை வெளிவந்து ரெண்டு மாசம் ஆச்சே. இன்னிக்கி எதுல படிச்சீங்க?“
அவர்: “அதுவா…நான் பழைய பேப்பர் கடை வெச்சுருக்கேன். இன்னிக்கி வந்த பழைய ஆன்மீக மலர் புக்ல பாத்தேன்.”
நான்: “ரொம்ப சந்தோசம் அம்மா. இப்படி கூப்பிட்டு பாராட்டணும்’கற எண்ணம் எல்லாருக்கும் வராது. ரொம்ப நன்றி.”
என்றோ எழுதிய ஒரு கட்டுரை ஏதோ ஒரு வழியாகச் சென்று பழைய புத்தகம் விற்கும் ஒரு பெண்மணியை அடைந்து இருப்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்! இறைவனின் லீலைகளைப் பற்றி வியப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?
அதே நேரத்தில் இந்த வாய்ப்பை அளித்த தினமலரின் ஆன்மீக மலர் குழுவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். உங்கள் நல்லாசியுடன் தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுத நாங்கள் முயற்சிப்போம். நன்றி.
இந்த தொடரின் கட்டுரைகளை இங்கே இணைத்துள்ளோம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து படித்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
Congrats and our best wishes!!!
Thanks a lot